
தென்னிந்திய சினிமாவில் இப்போது கயாடு லோஹர் குறித்த பேச்சுகள் தான் அதிகம் உலா வருகிறது. காரணம் அவர் நடித்த டிராகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் அவர் ஏற்று நடித்த பல்லவி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் கொடுத்தது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டதால், கயாடு லோஹர் தமிழ் மக்களிடத்தில் நன்றாக ரீச் ஆகியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இவரது போஸ்டுக்கு அஷ்வத் மாரிமுத்து கமெண்ட் செய்துள்ளார். தனது போஸ்ட்டின் கமெண்ட் செக்ஷனிலும் நீண்ட நெடிய நன்றி புராணத்தை தெரிவித்துள்ள கயாடு லோஹர், இன்ஸ்டாகிராமில் இந்த பிரச்னை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான படம் டிராகன். இதில் கதாநாயகியாக நடித்தவர்களில் கயாடு லோஹர் ஒருவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ” அஷ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி. பல்லவி போன்ற கதாபாத்திரத்தின் மூலம் என்னை தமிழ் சினிமாவில் அறிமுக படுத்தியதற்கு நன்றி. முதலில் நீங்கள் எனக்கு சொன்ன கதாபாத்திரம் கீர்த்தி கதாபாத்திரம்தான். ஆனால் எனக்கு அதில் நடிக்க தயக்கம் இருந்தது. அதன் பின்னர் எனக்கு உங்களிடம் இருந்து எந்தவிதமான அழைப்பு வராததால் நான் படத்தில் இல்லை என நினைத்துக் கொண்டேன்.
அதன் பின்னர் திடீரென ஒரு நாள் எனக்கு நீங்கள் இந்த படத்தின் கதையைச் சொல்லி பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தீர்கள். எனக்கு இரண்டு கதாநாயகிகள் இருக்கும் படம் என்பதால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் அந்த தயக்கத்தை புரிந்துக்கொண்ட நீங்கள் இந்த படம் உங்கள் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் வகையில் நான் உருவாக்கிக் கொடுக்கிறேன். என்னை நம்புங்கள் எனக் கூறினீர்கள். அதேபோல் இந்த படத்தின் மூலம் எனக்கு தமிழில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள். நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி கூறுவேன்.
அதேபோல் பிரதீப் ரங்கநாதன், படப்பிடிப்புத் தளத்தில் அதிகம் பேசவில்லை என்றாலும் சினிமாவில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தீர்கள். ஐரோப்பாவில் உங்களுடன் இருந்த நாட்கள் மறக்க முடியாது. எதிர்காலத்தில் எனக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். நன்றிகள் பிரதீப் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட்டில், இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டில் 100 வார்த்தைகள் தான் எழுத முடிகிறது. தயவு செய்து இன்ஸ்டாகிராம் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். தனது அன்பையும் நன்றியையும் தெரிவிக்க 100 வார்த்தைகள் போதாது என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கமெண்ட் செய்து, கயாடு லோகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.