
குழந்தைகளை அதிகம் கவர்ந்த முபாசா தி லயன் கிங் படத்துடைய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் வெளியாகும் டயனோசர், விலங்குகள் கான்செப்ட் கொண்ட படங்கள் குழந்தைகளை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங் என்ற படம் வரவேற்பை பெற்றது.
இந்த ஜேனரில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதால் அவற்றை உருவாக்குவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி முபாசா தி லயன் கிங் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் மொழிகளில் வெளிவந்தது.
தமிழிலும் இதனை டப்பிங் செய்து வெளியிட்டிருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற கேரக்டர்களுக்கு தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர்கள் குரல் கொடுத்ததால் எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.
முபாசா கேரக்டருக்கு நடிகர் அர்ஜூன் தாஸ் குரல் கொடுத்திருந்தார். அவருடன் நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், அசோக் செல்வன் என பலரும் குரல் கொடுத்திருந்தனர். இதனால் படம் சுவாரசியமாக அமைந்தது.
இந்தியில் இந்த படத்திற்கு ஷாரூக்கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் பின்னணி குரல் கொடுத்தனர். அங்கும் இந்த படம் வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் இந்த படம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழில் இந்த படம் ரூ. 23 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முபாசா தி லயன் கிங் படத்துடைய ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த படம் இம்மாதம் 26 ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. ஜியோஹாட்ஸ்டாரில் இந்த படத்தை தமிழில் கண்டு ரசிக்கலாம்.