
மணிகண்டன் முன்னணி கேரக்டரில் நடித்து தியேட்டர் ரிலீஸில் வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 3 நாட்களில் மட்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்திருப்பதாக ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கவனம்பெறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் மணிகண்டன் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜெய் பீம், லவ்வர், குட் நைட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து மணிகண்டன் நடித்த ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தாத இந்த திரைப்படம் ரசிகர்களை முழுவதுமாக திருப்தி படுத்தியதால் அடுத்தடுத்து காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக அமைந்தன.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவின் வாழ்க்கையை, காமெடி காட்சிகள் நிறைந்ததாக குடும்பஸ்தன் படத்தை படக்குழுவினர் உருவாக்கியிருந்தனர். இந்த படத்தில் மணிகண்டன் உடன் மேக்னா குரு, சோமசுந்தரம், சுந்தரராஜன் முக்கிய கேரக்டரில் நடித்தனர். வைசாக் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.
முன்னதாக இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததால் ஓடிடி ரிலீஸ் தேதியை மார்ச் 7-ம் தேதி என மாற்றியிருந்தனர்.
இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தமிழில் குடும்பஸ்தன் திரைப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 3 நாட்களில் மட்டும் இந்த படம் 50 மில்லியனுக்கும் அதிகமான வியூசை குவித்துள்ளதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.
மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தியேட்டர் ரிலீஸ் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று புதிய ரிக்கார்ட்களை குடும்பஸ்தன் படம் ஏற்படுத்தி வருகிறது.