
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் விஜய் பட நடிகை. அவர் நடிக்க உள்ள படம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
1989-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘என் ரத்தத்தின் ரத்தமே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா. அடுத்து ‘இதய வாசல்’ படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்தவருக்கு ‘பூவே உனக்காக’ திரைப்படம் புதிய பாய்ச்சலை தந்தது.
விஜய்க்கு போட்டி போட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதையடுத்து ‘பூவே உனக்காக’ படத்தின் ஒளிப்பதிவாளரான சரவணனை திருமணம் செய்த சங்கீதா அத்துடன் சினிமாவிலிருந்து விலகியே இருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் நடித்திருந்த திரைப்படத்தின் மூலம் நடிப்புக்குக் கம்பேக் கொடுத்தார் சங்கீதா. மலையாளத்தில் நடித்து வந்த அவர், தமிழில் எப்போது ரீ-என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது 25 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் சங்கீதா. பரத் நடிப்பில் கடந்த 2018 ஆண்டு ‘காளிதாஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார் நடிகை சங்கீதா. இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கிறார்.