
இந்த வாழ்க்கை மிகவும் சிறியது என்பதை ஒவ்வொரு நிகழ்வுகளும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் திடீரென பிரபல நடிகர் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1986-ம் ஆண்டு வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களை நடித்தவர் கராத்தே மாஸ்டராக வலம் வந்தார். தற்போது வில் வித்தை பயிற்சியை பெரிய அளவில் கற்றுக்கொண்டு வருகிறார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் ஷிஹான் ஹுசைனி. இவர் மறைந்த நடிகர் விவேக்குடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர். படிக்கும்போதே கராத்தேவில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். அதேபோல் நடிப்பிலும் தனது கவனத்தை செலுத்தினார்.
வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்திருக்கிறார்.
விஜயின் ‘பத்ரி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். கடைசியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக அவர் யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்கிறார்கள்.
அதாவது என்னுடைய ஜெனட்டிக் பிரச்சினையால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் வைரஸால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என்று சொன்னார்கள். நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும்.
மேலும், “நான் ரத்த புற்றுநோயை எதிர்கொள்வேன். அதை எதிர்த்து மீண்டு வருவேன். லட்சக்கணக்கானோருக்கு கராத்தே கற்று கொடுத்தேன். கோழை தான் மரணத்தை கண்டு பயப்படுவான். வீரன் அல்ல. கராத்தே வீரன் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்க முடியாது. 2 நாள் இருக்குமோ, 3 நாள் இருக்குமோ அந்த நாட்களில் என்னால் முடிந்ததை செய்வேன். நான் புற்றுநோய் இருப்பதை கேட்டு அசரவே இல்லை. மன உறுதியுடன் இருக்கிறேன்” என்றார்.
மேலும், “எனது நண்பர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம். க்ரவுட் ஃபண்டிங் செய்யலாம் என்றெல்லாம் சொன்னார்கள். நான் யாரிடமும் கேட்கமாட்டேன். எனக்கு சொத்து இருக்கிறது அதை விற்று என்னுடைய மருத்துவ செலவை பார்த்துகொள்வேன்.” என்றார்
“உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே ஒரு கோரிக்கை. தமிழ்நாட்டுக்கு ஒலிம்பிக் வாங்குவதாக இருந்தால் மைதானம் வேண்டும். எனவே உதயநிதி ஸ்டாலின் வில் வித்தைக்கு மைதானத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். உடனடியாக தமிழ் மாணவர்கள் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் பயிற்சி செய்ய அனுமதி கொடுங்கள்” என்றார்.
“விஜய்க்கு ஒரு கோரிக்கை. தமிழ்நாட்டில் வில் வித்தையை பரப்ப வேண்டும். அதற்கான முன்னெடுப்பில் விஜய் ஈடுபட வேண்டும். பவன் கல்யாணுக்கு கராத்தே பயிற்சி கொடுத்தேன். அவரால் முடிந்தால் வில் வித்தைக்கான நிலத்தை தமிழகத்தில் வாங்க ஏற்பாடு செய்து தரவேண்டும்”என்றார்.