
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி புகழ் பெற்றவர். தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் இளையராஜாவால் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின், ‘தாஜ்மஹால்’, ‘பிரியமான தோழி’, ‘மழை’, ‘மாயாவி’, ‘மைனா’, ‘ரஜினி முருகன்’, ‘மனிதன்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.
மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அவரது வீட்டுக்குச் சென்று கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் அவருடைய உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் செல்போன் மூலம் கல்பனாவை தொடர்பு கொள்ள முயன்ற போதும் பதில் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, பாடகி கல்பனா கட்டிலில் மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், இதனை கல்பனாவின் மகள் மறுத்தார்.
இந்நிலையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக பாடகி கல்பனா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்த வயதில் நான் LB மற்றும் பிஹெச்டி படிப்புகளை ஒரு சமயத்தில் படித்துவருகிறேன். அதேநேரம், எனது இசை வாழ்க்கையிலும் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இதனால் மனஅழுத்தம் அதிகமானதால் பல காலமாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. இந்த பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றபோது எனக்கு இன்சோம்னியா பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
அதற்காக எனக்கு மருந்துகளும் கொடுக்கப்பட்டன. அந்த நாளில் மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். இன்றைக்கு நான் உயிரோடு திரும்ப வந்ததற்கு என் கணவர் அன்று பட்டபாடு தான் காரணம். என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் கஷ்டப்பட்டார்.
வெளியூரில் இருந்தாலும் சரியான நேரத்தில் போலீஸ் உதவியோடு என்னைக் காப்பாற்றினார். அதனால் நான் உயிர் தப்பித்தேன். எனக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. கடவுள் அருளால் நல்ல குடும்பம் எனக்கு கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.