
பாலிவுட்டில் இருந்து விலகுவதாக இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் அறிவித்துள்ளார். மேலும் பாலிவுட் திரையுலகம் ‘டாக்சிக்’ திரையுலகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழில் வெளியான ‘காஷ்மோரா’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இவரின் ‘கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் பாலிவுட் மீதான விரக்தியால் மும்பையிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அவர் பெங்களூருவில் குடியேறலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “பாலிவுட் திரையுலகம் ‘டாக்சிக்’காக மாறிவிட்டது. நான் அவர்களிடமிருந்து தூர விலகியிருக்க விரும்புகிறேன். யதார்த்ததுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நோக்கியே அவர்கள் நகர்கிறார்கள்.
ரூ.500, ரூ.800 கோடி வசூல் படைக்கும் படங்களை எடுப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, அழுத்தமான கதையம்சம் கொண்ட கிரியேட்டிவ் சூழல் இப்போது அங்கு இல்லை.
தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது. இப்போது என்னால் பரிசோதனை சார்ந்த முயற்சிகளைக்கூட இங்கே மேற்கொள்ள முடியவில்லை. காரணம், தயாரிப்பாளர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள்.
நான் அவர்களிடம், ‘உங்களுக்கு இப்படியான படங்களை எடுக்க வேண்டாம் என்று தோன்றினால் படங்களையே எடுக்காதீர்கள்’ என்று கூறினேன். ஒரு படம் உருவாவதற்கு முன்பே, அதை எப்படி வியாபாரமாக்க போகிறோம் என யோசிக்கிறார்கள். அதனால் படம் இயக்குவதற்கான மகிழ்ச்சியே காணாமல் போகிறது. இதனால் தான் நான் முற்றிலுமாக பாலிவுட்டிலிருந்து விலகுகிறேன். விரைவில் மும்பையிலிருந்து வெளியேறுகிறேன்” என்றார்.