
தமிழக அரசியலில் தனக்கென தனி இடம் பதித்த பெண் தலைவரான, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
திரையுலகில் நிகரில்லா ஒரு நடிகை. தமிழ்நாடு அரசியலில் அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர். மாநில உரிமைக்காக குரல் கொடுத்த போராட்ட குணத்திற்கு சொந்தக்காரர். இந்திய அரசியல் களத்தில் எதற்கும் அஞ்சாமல் துணிந்து முடிவெடுத்த பெண் ஆளுமை. அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரை விட அதிக தேர்தல்களிலும், அதிக தொகுதிகளிலும் அக்கட்சியை வெற்றி பெற வைத்தவர். அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாகவும் வாக்கு வங்கியில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் அதிமுகவை மாற்றியவர்.
எம்ஜிஆர் காலத்தில் சத்துணவு திட்டத்திற்கான முகமாக இருந்தவர், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக உயர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உச்சம் தொட்டவர். பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என பெண்களுக்காக இவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். தொட்டில் குழந்தைத் திட்டத்தால் பல மாவட்டங்களில் ஆண்-பெண் விகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வீராணம் திட்டத்தைக் கொண்டு வந்தது, அம்மா உணவகம் கொண்டு வந்தது என இவரது தனித்துவமான திட்டங்களின் பட்டியலும் நீளம். 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து 9-வது அட்டவணையில் சேர்த்தது உள்ளிட்டவை இவர் பெயர் சொல்லும் சாதனைகள். மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக்காகவும் ஜெயலலிதாவின் குரல் எப்பொழுதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்ததாக நினைவுகூர்ந்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான பொன்னையன்.
கோபம் வந்தால் மத்தியில் ஆட்சியையே கவிழ்த்துவிடும் அளவிற்கு பிடிவாதக்காரர் என்றும் அதே சமயம் அன்பு காட்டுவதில் குழந்தை போன்றவர் என்றும் கூறப்படும் அளவிற்கு இரு வேறு முகங்களைக் கொண்டவர் என்று நினைவுகூர்ந்தார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.
பெண்கள் எந்த நிலையில் பிறரை சார்ந்து இருக்கக் கூடாது என்று என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் என்று எம்ஜிஆரின் பாடல் வரிகள் ஏற்ப ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தொண்டர்கள் நெஞ்சிலும் தமிழக மக்களின் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் செல்வி ஜெ.ஜெயலலிதா என்பதே நிதர்சனம்.