
சென்னையில் 2-வது ஆட்டோமேஷன் கண்காட்சி வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது.
தென் மண்டல ஆட்டோமேஷன் கண்காட்சி கடந்த 2023-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இது வெற்றிபெற்றதையடுத்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 2-வது தென்மண்டல ஆட்டோமேஷன் கண்காட்சியை மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் சென்னையில் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் அதிநவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். அத்துடன் பல்வேறு துறை சார்ந்த தொழிலதிபர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது இருக்கும்.இக்கண்காட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சமீபத்திய ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கும்.
இதுகுறித்து இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரும் ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான எம்.ஆரோக்கியசாமி கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் தொழில் துறைக்கு மறுவடிவம் கொடுத்து வருகிறது. அத்துடன் உற்பத்தி மற்றும் வணிக பயன்பாடுகளில் புதிய சாத்தியங்களையும் உருவாக்கி வருகின்றன. இந்த முன்னேற்றங்களை ஆராய்வதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இந்த கண்காட்சி ஒரு முதன்மையான தளமாக அமையும்” என்றார்.