
1,100 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்தக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீஸ் மீதான நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு TANTRANSCO நிறுவனம் பகிர்மானம் செய்து வருகிறது. இதற்காக 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரையான காலத்துக்கு 1,100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என TANTRANSCOக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை எதிர்த்து TANTRANSCO நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே TANTRANSCOக்கு சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
ஆனால், அதற்கு மாறாக ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதமானது என்றும் அவர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, TANTRANSCOவுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான நடவடிக்கையை நிறுத்தி வைத்து, விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.