
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் மாநில முதல்வராக ரேகாகுப்தா பதவியேற்றார். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகைவழங்கப்படும். அடுத்த மாதம்8-ம் தேதி அவர்களது வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக தலைமை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் துணை முதல்வர் பவன் கல்யாணும் விழாவில் பங்கேற்றனர். மேலும் விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 50,000 பேர் விழாவில் பங்கேற்றனர். சுமார் 25,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியின் 9-வது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஸ்ரா, மச்சிந்தர் சிங் சிர்சா, ஆசிஷ் சூட், பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.