
இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பஸ்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு செய்திருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்றது. பின்னர், உலக நாடுகளின் தலையீட்டால், இந்தப் போர் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இருதரப்பினரும் பிணைக் கைதிகளை பரஸ்பரமாக விடுவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் பேட் யாமில் அடுத்தடுத்து 3 பஸ்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘பேட் யாமில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் பஸ்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், நடத்தப்பட்ட சோதனையில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டது. ஆனால், 3 பஸ்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை,’ எனக் கூறப்பட்டது.