
பளு தூக்கும் பயிற்சியின் போது 270 கிலோ எடைகள் ஏற்றப்பட்ட இரும்பு கம்பி தவறுதலாக கழுத்தில் விழுந்ததில், பளுதூக்கும் வீராங்கனை துடிதுடித்து மரணம் அடைந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தை சேர்ந்தவர் யஸ்திகாஆச்சார்யா.17 வயதாகும் இவர் பவர் லிப்டிங் பிரிவில் தங்கப் பதக்கத்தை உள்ளூர் போட்டிகளில் வென்றிருக்கிறார். தொடர்ந்து அவர் ஜிம்மில் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு பளுதூக்கும் பயிற்சிக்கு யஸ்திகா அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பல நாட்கள் அவர் இதே ஜிம்மில் பயிற்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனதுபயிற்சியாளர் உடன் யஸ்திகா பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இரும்பு கம்பியில் மொத்தம் 270 கிலோ எடை ஏற்றப்பட்டது.
அதனை தூக்கி பயிற்சி செய்ய முயன்ற போது தடுமாற்றம் ஏற்பட்டு,270 கிலோ எடையுடன் கூடிய இரும்பு கம்பி யஸ்திகாவின் கழுத்தின் பின்புறம் விழுந்தது. இதில் அவர் துடிதுடித்து மயக்க நிலைக்குச் சென்றார். பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவரதுஉயிர் பிரிந்திருக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலையில் யஸ்திகாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.