
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,642 டாக்டர்கள் நியமனத்தில், தகுதியில்லாத 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருப்பதால், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட்டு, வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என, தேர்வு எழுதிய டாக்டர்கள், அரசிடம் மனு அளித்துள்ளனர்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக, 2,642 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை, 24,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர்; அவர்களில், 14,855 டாக்டர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதில், 4,585 டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. தகுதியான, 2,642 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இந்நிலையில், டாக்டர் பணி நியமனத்தில் தகுதியில்லாதவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திற்கு மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, தேர்வில் பங்கேற்ற டாக்டர்கள் கூறியதாவது:மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பின்படி, கடந்தாண்டு ஜூலை 15க்கு முன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, உதவி டாக்டர் பணிக்கு தகுதி பெற்றவர்கள். ஆனால், ஜூலை 15க்கு பின், பதிவு செய்த ஏராளமானோர் தேர்வில் பங்கேற்றனர்.
அதில், 400க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதனால், தகுதியில்லாத டாக்டர்கள், பணியில் சேர வாய்ப்புள்ளது. தகுதியானவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்தாண்டு ஜூலை 15க்கு முன் பதிவு செய்த டாக்டர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, பணி நியமனம் வழங்கப்படுவர். தகுதியில்லாத டாக்டர்கள் உறுதியாக நியமிக்கப்பட மாட்டார்கள்.
எனவே, தகுதியான டாக்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், தேர்வானவர்களின் விபரங்களுடன் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.