
மத்திய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது பனாமா தேசம். அங்கு தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட சுமார் 300 பேரை (பெரும்பாலும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்) விடுதி ஒன்றில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
பனாமாவில் அடைக்கப்பட்டுள்ள 300 பேரில் இந்தியர்கள் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்தவர்களும் உள்ளதாக தகவல். இதில் சிலரை அவர்களது தாயகத்துக்கு அமெரிக்கா திரும்ப அனுப்புவதில் சிக்கல் இருக்கின்ற காரணத்தால் பனாமாவை ‘ஸ்டாப் ஓவர்’ பாயிண்டாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பனாமாவில் உள்ள விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. விடுதியில் உள்ள வெள்ளைத்தாளில் ‘நாங்கள் எங்கள் தேசத்தில் பாதுகாப்பாக இல்லை’, ‘தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்’, ‘எங்களுக்கு உதவுங்கள்’ என எழுதி, அதை கண்ணாடி ஜன்னல் வழியாக சட்டவிரோத குடியேறிகள் காண்பிக்கும் போன்ற படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

“புலம்பெயர்ந்தோரின் சுதந்திரம் பறிக்கப்படவில்லை. அவர்கள் எங்களது பாதுகாப்பில் உள்ளனர்” என பனாமா தேசத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் பிராங்க் அப்ரேகோ கூறியுள்ளார். அமெரிக்கா உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை பனாமா ஏற்பாடு செய்துள்ளதாக அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஒரு பாலமாக பனாமா இதில் செயல்படுகிறது. இதற்கான செலவுகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்போது பனாமாவில் உள்ளவர்களில் 171 பேர் தங்களது தாய் நாட்டுக்கு திரும்ப ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், 97 பேர் வேறு நாடுகளுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். தாய் நாட்டுக்கு திரும்ப செல்ல விருப்பம் இல்லாதவர்களை டாரியன் பகுதிக்கு கொண்டு செல்ல பனாமா திட்டமிட்டுள்ளது. இதை பிராங்க் அப்ரேகோ கூறியுள்ளார். புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் அமைப்பு அவர்களை வேறு நாட்டுக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யும் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இதுவரை அங்கிருந்து 332 இந்தியர்கள் தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அழைத்து வரப்பட்டனர். பிப்ரவரி 5-ம் தேதி 104 பேர், 15-ம் தேதி 116 பேர், 16-ம் தேதி 112 பேர் என மூன்று விமானங்களில் அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களது கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.