
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொசு அதிகரிப்பால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கம் இன்றி அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து புதுச்சேரி நகராட்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கியது. நகராட்சியில் மொத்தம் உள்ள 42 வார்டுகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் மிஷின்கள் 30 புகை மருந்து அடிக்கும் ஐந்து மிஷின்கள் புதியதாக வாங்கப்பட்டு நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் மருந்து தெளிக்கப்பட்டது வருகிறது.
இந்நிலையில் முத்தியால்பேட்டை நெல்லிதோப்பு உருளையான்பேட்டை உப்பளம் முதலியார்பேட்டை ஆகிய ஐந்து தொகுதிகளிலும் செல்லும் பிரதான பெரிய வாய்க்கால்களில் மட்டும் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளால் துவங்கப்பட்டது. இதற்காக விவசாய நிலங்களில் பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோனை புதுச்சேரி நகராட்சி வாடகை ஒப்பந்தம் செய்துள்ளது.
10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ட்ரோனில் 20 நிமிடத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்க முடியும். ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதனால் இரண்டு நாட்களில் ஐந்து தொகுதிகளிலும் உள்ள பெரிய வாய்க்கால்களில் மருந்து அடித்து விடலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.