
மியன்மார் நாட்டில் சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கி உள்ள 150 பேர், தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, தகவல்களை சரிவர விசாரிக்காமல் வெளிநாடு செல்வோர், குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி பலர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களிடம் சிக்கி உள்ளனர். அவர்களை அவ்வப்போது மத்திய அரசு மீட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கம்போடியா, லாவோஸ் நாடுகளில் இருந்து இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள், சீனாவைச் சேர்ந்த சைபர் கிரிமினல்களிடம் அடிமைகளாக சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.இவர்கள் அனைவரும், தாய்லாந்து நாட்டின் எல்லையில் மியன்மார் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இந்த பகுதிகள் அனைத்தும், அரசின் நிர்வாகத்தில் இல்லாதவை அரசை எதிர்த்து போர் நடத்தும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மியன்மார் அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. அடிமைகளாக சிக்கி உள்ள அனைவரும், இன்டர்நெட் மூலம் இந்தியர்களிடம் பல்வேறு வகையிலான ஆன்லைன் மோசடியில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பாக, கரீம்நகரின் கரீம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதுக்கர் ரெட்டி என்பவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்னர் ஆடியோவை அவர் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில், ‘ நாங்கள் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்கிறோம் என்ற சந்தேகப்பட்டு, மோசடி நபர்கள் எங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எங்களை அறையில் அடைத்து வைத்து உள்ளனர்’ எனக்கூறியுள்ளனர். அவர்கள் அனுப்பிய ‘லொக்கேஷனும்’ தாய்லாந்து எல்லையில் உள்ள மியன்மார் பகுதியைக் காட்டுகிறது.
மதுக்கர் ரெட்டியின் தந்தை கூறுகையில் ‘எனது மகன் துபாயில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மியன்மாருக்கு சென்றார். அங்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அடைத்து வைத்து உள்ளனர். அங்கு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகிறார். அனைத்து இந்தியர்களையும் மீட்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.