
ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் காய்ச்சல் பரவல் குறித்து கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனும், 45 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நோய், தொற்றும் தன்மை கொண்டதில்லை என்பதால், மக்கள் பீதியடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் காய்ச்சல் பரவலை கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி மாணவர்களின் உடல்நலனைக் கண்காணித்து, மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், படுக்கை வசதிகள் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் முகக்கவசம் அணிதல், உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையை அணுகுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.