
மைசூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மைசூரு காவல் ஆணையர் சீமா லட்கர் கூறியதாவது:விஸ்வேஸ்வரய்யா நகரின் வித்யாரண்யபுராவில் உள்ள சங்கல்ப் அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் இறந்து கிடந்தனர். அவர்கள் இரண்டு தனித்தனி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்தனர். தாய் பிரியம்வதா(62) தனியாக வசித்து வந்த நிலையில், சேத்தன்(45) அவரது மனைவி(43) மற்றும் அவர்களின் மகன் குஷால்(15) மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர்.சேத்தன் ஹாசனில் உள்ள கோரூரைச் சேர்ந்தவர், அவரது மனைவி மைசூருவைச் சேர்ந்தவர்.
சேத்தன் ஒரு இயந்திர பொறியாளராக இருந்தார், 2019ல் மைசூருவுக்கு மாற்றப்படுவதற்கு முன் துபாயில் பணிபுரிந்தார். அவர் இங்கு ஒப்பந்ததாரராக இருந்தார். ஆன்லைன் செயல்முறையைப் பயன்படுத்தி சவுதிக்கு தொழிலாளர்களை அனுப்பி உள்ளார்.இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குடும்பத்தினர் கோரூரில் உள்ள கோவிலுக்குச் சென்று வந்துள்ளனர்.அதன் பிறகு தான், வீட்டில் ஏதோ நடந்துள்ளது. நான்கு பேர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சேத்தன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் குற்றவியல் அதிகாரியின் குழு ஆய்வு செய்த பின்னர் தான் தற்கொலையா இல்லை கொலையா என்பது குறித்து தெரியவரும். நால்வரின் மரணத்தின் தன்மை இன்னும் விசாரணையில் உள்ளது.