
வாகன நெரிசலில் சிக்காமல் தப்பிக்கும் நோக்கில், பாராகிளைடிங்கில் சென்ற கல்லுாரி மாணவர், சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு சென்று சேர்ந்தார்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பசரானி கிராமத்தை சேர்ந்த சமர்த் மஹாங்கேடே என்ற மாணவர் முதலாமாண்டு பி.காம்., படித்து வருகிறார். இவருக்கு வயது 19. படித்துக் கொண்டே பகுதி நேரமாக கரும்பு ஜூஸ் கடை ஒன்றில் வேலையும் பார்த்து வருகிறார்.
கல்லுாரி செமஸ்டர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக, இவருக்கு சில நாட்களுக்கு முன் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்படி ஒத்தி வைத்த தேர்வை மீண்டும் நடத்துவதாக கல்லுாரி அறிவித்தது, மாணவருக்கு தெரியவில்லை.தேர்வு மையத்துக்கு சமர்த் வராததை அறிந்த அவரது நண்பர் ஒருவர், போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு, இன்னும் அரை மணி நேரத்தில் துவங்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த வழித்தடம் முழுவதும் வாகன நெரிசல் கடுமையாக இருந்தது. எப்படிப் பார்த்தாலும், அரை மணி நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல்லவே முடியாத நிலை இருந்தது.
என்ன வழி என்று யோசிப்பதற்குள் 10 நிமிடங்கள் கடந்து விட்டன. தேர்வு துவங்குவதற்கு 20 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், போக்குவரத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க, பாராகிளைடிங் மூலம் செல்ல முடியுமா என்று யோசித்தார்.அதன்படி அங்கே இருந்த பாரா கிளைடிங் பயிற்சியாளர் கோவிந்த் எவாலேவிடம் சென்றார். ‘பத்து நிமிடத்துக்குள் என்னை தேர்வு மையத்துக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும்’ என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த கோவிந்தும், அதற்கு ஒப்புக் கொண்டார். அடுத்த நிமிடமே கோவிந்த், சமர்த் இருவரும், பாராகிளைடிங் மூலம் தேர்வு மையத்துக்கு புறப்பட்டனர். சரியாக தேர்வு மையம் மேலே சென்றதும், சமர்த்தை பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டார் கோவிந்த்.
உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்கு சென்றவர், தேர்வை சிறப்பாகவும் எழுதி முடித்தார். மாணவரின் இந்த சமயோசித முடிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அவர் பாராகிளைடிங்கில் பறந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவனின் செயலை அனைவரையும் பாராட்டி வருகின்றனர்.
மாணவரின் செயலை, சிவசேனா எம்.பி., மிலிந்த் தியோரா பாராட்டி உள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது: இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த மாணவனின் உறுதி உண்மையிலேயே ஊக்கம் அளிக்கிறது. அவன் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என கூறியுள்ளார்.