
திமுக தோழமை கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாளை அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.
திமுக தோழமை கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம், பதவிக்காலம் முடிந்துபோன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திட மோடி அரசு முயற்சி செய்வதாகவும், வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதல்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறும் என்று திமுக தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.தமிழ்நாட்டில் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.