Friday, April 4, 2025
Homeசெய்திகள்புதுநகர் வளர்ச்சித் திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

புதுநகர் வளர்ச்சித் திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த கட்டுமான கண்காட்சி நிகழ்ச்சியில், புதுநகர் வளர்ச்சித் திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் ஆகிய 9 வளர்ச்சி மையங்களில் நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து இணைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், வளர்ச்சிக்கு வித்திடவும் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள கிளம்பாக்கம், மாதவரம் போக்குவரத்து முனையங்களுடன் குத்தம்பாக்கம் முனையமும் விரைவில் சேரவிருக்கிறது. இவற்றுடன் செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன பேருந்து முனையங்கள் அமையவுள்ள நல்ல செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் உள்ளடங்கிய 10 மண்டல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இதில் 136 நகரங்கள் வளர்ச்சியடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே வித்திடும் திட்டங்களாகும்.

முதல்வர் தெரிவித்திருப்பதைப் போல, தமிழகத்தின் மக்கள்தொகையில் 48 சதவீதம் நகரங்களில் வசிக்கும் நிலையில், நகரங்களை மையப்படுத்தி தீட்டப்படும் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக நகரங்களுக்கு குடிபெயரும் இளைஞர்கள், பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற ஊர்களில் நகரங்களின் மையப் பகுதியைவிட புறநகர் பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் அடர்த்தி மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதிக அளவில் உள்ளது.

இதனால் நகரங்களை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் போக்குவரத்து, சாலை, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் குழாய் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி என்ற தரம் உயர்த்தும் அறிவிப்புகள் அரசால் வெளியிடப்பட்டதும், நகரங்களுக்கு இணையான அடிப்படை வசதிகள் நமக்கு கிடைக்கும் என்று எண்ணியிருந்த மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்தனர்.அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி மற்றும் நகராட்சிகளை பொதுமக்கள் அணுகும்போது, தரம் உயர்த்தப்பட்டது உண்மை என்றாலும் அரசிடம் இருந்து எந்த நிதியுதவியும் வரவில்லை என்று உள்ளாட்சி பிரதிநிதிகள் கைவிரிக்கும் நிலையே நீடிக்கிறது.

ஆனால், வரிவசூல் மட்டும் தரம் உயர்த்தப்பட்ட நிலைக்கேற்ப அதிகரித்ததால் மக்களிடம் அதிருப்தியே நிலவி வருகிறது. சில இடங்களில் எங்களது ஊரை தரம் உயர்த்த வேண்டாம் என்று மக்கள் போராடும் நிலையைக்கூட பார்க்க முடிகிறது. ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தரம் உயரும்போதும், மாநகராட்சி பகுதிகள் விரிவடையும்போதும் நகரத்தில் இருப்பவர்களுக்கு இணையாக வசதிகளும் விரிவடைய வேண்டும். அது நடக்காததால் ஏமாற்றத்தில் இருந்த மக்களுக்கு தமிழக முதல்வரின் அறிவிப்பு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments