
தொலை தொடர்பு உரிம விதிமுறைகளின்படி, நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு வழங்க வேண்டும்.இதை கணக்கிடுவதில் தொலை தொடர்பு சேவை வழங்குவதன் வாயிலாக ஈட்டப்படும் வருவாயை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் கடந்த 2019ல் வெளியான தீர்ப்பில், தொலை தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இந்த தீர்ப்பைத் தொடர்ந்து வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டி என நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருந்தது.
இதையடுத்து, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், கணக்கீட்டு முறையில் பிழை இருப்பதாக கூறி, மனு தாக்கல் செய்தன. கடந்த 2021ம் ஆண்டு இந்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.இதன்பின், ஏற்கனவே செலுத்திய நிலுவைத் தொகையை கருத்தில் கொள்ளவில்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களை சுட்டிக்காட்டி, நிறுவனங்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.