
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் சொன்னதாக இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகம் முட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(30) சாராய வியாபாரி. மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்துள்ளார்.
சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் சொல்வதாக அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வந்த ஹரிஷ்(25), என்பவர் மீது ராஜ்குமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஹரிஷ், அவரது நண்பரும் இன்ஜினியரிங் மாணவருமான சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி(22), தினேஷ் ஆகிய மூவரும் முட்டம் வடக்கு தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் மூவேந்தன்(35), தங்கதுரை(28) ஆகிய மூவரும் கத்தியால் ஹரிஷை குத்தியுள்ளனர். தடுக்க வந்த ஹரி சக்தியையும் அவர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி சக்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த உறவினர்கள் ராஜ்குமார் வீட்டின் முன்புறம் இருந்த கொட்டகையை தீ வைத்து கொளுத்தியதுடன் மூவேந்தன் வீட்டில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை எஸ்பி. ஸ்டாலின் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாராயத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.