
போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் இந்தியா குறைத்துள்ளது. பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்புக்கு முன்னதாகவே (பிப்.,13ம் தேதி) இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, மதுபானம் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.இந்த சந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று தாயகம் திரும்பினார். ஆனால், சந்திப்பிற்கு ஒருநாள் முன்பாகவே, அமெரிக்காவின் போர்பன் விஸ்கிக்கான இறக்குமதி வரி 50 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கான சுங்கவரி 50 சதவீதம் மற்றும் கூடுதல் வரி 50 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இந்த வரி 150 சதவீதமாக இருந்தது. இந்த வரி விதிப்பு போர்பன் விஸ்கிக்கு மட்டும் தான் என்றும், மற்ற மதுபானங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த போர்பன் விஸ்கி தயாரிப்பாளர்களுக்கு நல்ல பலனடைய உள்ளனர். ஏனெனில், இந்தியாவுக்கு போர்பன் விஸ்கியை ஏற்றுமதி செய்யும் முன்னிலை நாடாக அமெரிக்க திகழ்கிறது.கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.