
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில், 104 பேரை முதற்கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், பஞ்சாபின் அமிர்தசரசுக்கு கடந்த பிப்., 5ம் தேதி வந்து சேர்ந்தனர். இந்த, 104 பேரில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக இடம்பெற்று இருந்தனர்.
அவர்கள் அமெரிக்க விசா பெறுவதற்காக உள்ளூர் ஏஜன்டுகளை நம்பி, 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்து, ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.முறையான விசா இன்றி வெவ்வேறு நாடுகள் வழியாக அழைத்து செல்லப்பட்டு, அமெரிக்காவில் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த கண்ணீர் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், 2வது விமானம் நாளை (பிப்.,15) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்குகிறது. ஏற்கனவே, ‘487 இந்தியர்களை வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே, ‘குஜராத், ஹரியானாவில் விமானங்கள் ஏன் தரையிறங்கவில்லை’ என பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சீமா கேள்வி எழுப்பி உள்ளார்.மேலும் அவர், ‘நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் அமிர்தசரஸில் தரையிறங்குவதை உறுதி செய்வதன் மூலம் பஞ்சாபை அவதூறு செய்ய அரசாங்கம் விரும்புகிறது. ஹரியானா அல்லது குஜராத் மாநிலத்தில் ஏன் தரையிறங்க கூடாது? இது பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பா.ஜ.,வின் முயற்சி என்பது தெளிவாகிறது. இந்த விமானம் ஆமதாபாத்தில் தரையிறங்க வேண்டும்,’ என்றார்.