Saturday, April 5, 2025
Homeசெய்திகள்அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார் பிரதமர் மோடி.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார் பிரதமர் மோடி.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானை சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்து நேற்று ( பிப். 13-ம் தேதி) அங்கிருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி அதிகாலை வாஷிங்டன் சென்றடைந்தார். வாஷிங்டனின் பிளேர் ஹவுசில் தங்கியிருந்த மோடியை, உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் விவேக் ராமசாமி மோடியை சந்தித்து பேசினார்.

அவரை தொடர்ந்து அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஹிந்து – அமெரிக்கரான துளசி கப்பார்டை பிரதமர் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார்.அப்போது, ‘என் சிறந்த நண்பனே’ என மோடியை, டிரம்ப் வரவேற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, டிரம்ப்புக்கு, மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: நான் இங்கு நுழைந்தபோது, ஆமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ மற்றும் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். 3வது முறையாக பிரதமராக இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். இரு நாடுகளின் முன்னேற்றம், செழுமையை நோக்கி நாம் ஒன்றாக பயணம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

சந்திப்பின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.இந்த சந்திப்பின் போது, இருநாட்டு வர்த்தகக் கொள்கைகள், பரஸ்பர வரி விதிப்பு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டின் மீது இந்தியாவுக்கு உள்ள கவலைகள், அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் விவகாரம், ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல், வரி விதிப்பு, வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments