
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1,196 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரலின் புனே பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த மோசடி தொடர்பாக அதிகாரிகள் புனே, டில்லி, நொய்டா மற்றும் முசாபர்நகரில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், போலி நிறுவனங்கள் துவக்கி, வரி ஏய்ப்பு செய்வதற்காக பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக குற்றவாளி, போலி நிறுவனங்கள் துவக்கியதுடன், போலியாக பில்கள் தயாரித்து, நேர்மையாக வணிகத்தில் ஈடுபட்டதை போல் காட்டி உள்ளார். இந்த பில்களில் எந்த உண்மைத்தன்மையும் இல்லாததுடன், அதில் எந்த பொருள் விற்கப்பட்டது எனக்கூறப்படவில்லை. இந்த வகையில், இந்த மோசடி கும்பல் 1,196 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி, முசாபர்நகரை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ள அவர், இந்த மோசடியின் சூத்ரதாரியாக இருந்துள்ளார். ஜிஎஸ்டி பதிவுக்காகவும், வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பதை தடுக்கவும் அவர், முகவரிகள், இமெயில் ஐடி, மொபைல் போன்கள் என்ற தகவல்களை சேமித்து வைத்து இருந்தனர். மோசடியாக நிறுவனங்களை துவக்கி, இந்த தகவல்களை பயன்படுத்தி ஜிஎஸ்டி மோசடி நடந்துள்ளது.
அதிகாரிகளின் சோதனையில் , உண்மையான நிதி ஆதாரங்கள், நிறுவன முத்திரைகள் மற்றம் சீல்கள் மற்றும் போலி நிறுவனங்கள் தொடர்பான ஆதாரங்கள் சிக்கின. தொடர் விசாரணையில், எந்த நேர்மையான வணிகமும் செய்யாத போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மோசடி தொடர்பான வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரம் வெளியிடப்படப்படவில்லை.