
தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் ஒரு நீர் எருமை வாழ்ந்து வருகிறது. 3 வயதில் வழக்கமாக ஒரு நீர் எருமை இருக்கும் உயரத்தைவிட, 20 அங்குலம் உயரமாக உள்ளது. தற்போது, 6 அடி, 8 அங்குல உயரம் கொண்டதாக அறியப்படுகிறது. அனைவரிடமும் நன்றாக பழகுவதாக கூறப்படுகிறது. அதன் உரிமையாளர் இந்த நீர் எருமைக்கு ’கிங் காங்’ எனப் பெயரிட்டுள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 35 கிலோ உணவை உட்கொள்வதாகவும், குறிப்பாக வைக்கோல், சோளம் மற்றும் வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.
கிங் காங் உரிமையாளர் சுசார்ட் பூஞ்சாரோன் என்பவர் கூறுகையில், “இயற்கையில் ராட்சத விலங்குகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் இந்த நீர் எருமை மிகவும் சாதுவாக இருக்கும். குளத்தில் வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பண்ணையில் வேலை செய்யும் நபர் ஒருவர் இது குறித்து கூறும்போது, “கிங் காங் பிறக்கும்போது மற்ற எருமைகளை விட மிகவும் உயரமாக இருந்ததை உணர்ந்தோம். இதனால் இதன் உயரம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது முன்பே கணிக்க முடிந்திருந்தது. தற்போது அதற்கு 3 வயதுதான் ஆகிறது. இளம் வயதாக இருப்பினும், பார்ப்பதற்கு உருவத்தில் பெரிதாக காட்சியளிக்கிறது” என்றார்.