
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பிரவீன் சித்திரவேல் 16.50 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரரான முகமது சலாவுதீன் 16.01 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். கேரளாவைச் சேர்ந்த முகமது முஹசின் 15.57 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஹெப்டத்லானில் தெலங்கானா வீராங்கனை நந்தினி அகசாரா 5,601 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹரியானாவின் பூஜா (4,999 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தின் தீபிகா (4939 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவின் அனிமேஷ் குஜூர் இலக்கை 20.58 வினாடிகளில் எட்டி தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தின் ராகுல் குமார் (21.06), நித்தின் (21.07) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஆந்திராவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 23.35 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். கர்நாடகாவின் உன்னதி ஐயப்பா (23.70) வெள்ளிப் பதக்கமும், தெலங்கானாவின் நித்யா கந்தே (23.76) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.