
ஊட்டி கேரட் மூட்டைகளில் கலந்து விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட, தரமில்லாத கர்நாடக கேரட் திருப்பி அனுப்பப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட் சுவையாக இருக்கும். அதிலும், தற்போது நிலவும் உறைபனி காலத்தில் விளைந்த கேரட்டிற்கு சமவெளிப் பகுதிகளில் கிராக்கி அதிகம்.
இந்த கேரட் கிலோ, 40 முதல், 67 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்நிலை யில், கர்நாடக மாநிலம், மாளூர் பகுதியில் சில வியாபாரிகள், தரம், சுவை குறைந்த கேரட் மூட்டைகளை, ஊட்டி கேரட் மூட்டைகளில் கலந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது.
ஊட்டி விவசாயிகள் சங்கத்தினர், குன்னுார் அருகே கேத்தி பாலாடா பகுதிக்கு நேற்று சென்று, கேரட் கழுவும் மையங்களில் ஆய்வு நடத்திய போது, 5 டன் மாளூர் கேரட், இயந்திரங்களில் கழுவ வைத்துள்ளது தெரிந்தது.மைய உரிமையாளர்களிடம் விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தரமில்லாத கேரட் லாரி கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கேத்தி போலீசார், சில வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.