Monday, April 21, 2025
Homeசெய்திகள்புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்.

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்.

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மணவெளியில் புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதி மாணவர்களுக்கென 1991-ம் ஆண்டில் அரசு ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 6 வகுப்பறைகள், சமையல் கூடம் மற்றும் கழிப்பிட வசதி இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுவர் இன்று இடிந்து விழுந்துள்ளது. அதில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதை கண்ட மற்ற மாணவர்கள் அலறி அடித்துகொண்டு சிதறி ஓடினர். குடிநீர் தொட்டி கட்டிடம் இடிந்ததில் நான்காம் வகுப்பு படிக்கும் பவன்குமார் (வயது 8), பவின் (வயது 8), 5-ம் வகுப்பு படிக்கும் தேஷிதா (வயது 10) காயமடைந்தனர். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து முதலுதவி செய்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

அங்கு தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்தவுடன் கல்வித்துறை வட்ட ஆய்வாளர் லிங்கசாமி சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் பேரவையில் இருந்து கல்வியமைச்சர் நமச்சிவாயம், அரசு மருத்துவமனை சென்று குழந்தைகளின் உடல் நலனை விசாரித்தார். பெற்றோரிடம் பேசினார்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், “அரசுப் பள்ளியில் சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமாகி உள்ளது. அனைத்து வகுப்பறைகளும் மழைக் காலங்களில் தண்ணீர் கசிகிறது. மேலும் தளத்தின் காரைகள் உடைந்தும் காணப்படுகிறது. கழிவறை எந்த நேரத்திலும் உள்வாங்கக் கூடிய அளவில் இருக்கிறது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பள்ளியை தொடங்கிய காலத்தில் அப்போதிருந்த ஆசிரியர்கள், பொதுமக்கள் உதவியுடன் குடிநீருக்கும் மாணவர்கள் கை கழுவதற்கும் தொட்டி அமைக்கப்பட்டு குழாயும் இணைத்துள்ளனர். பல ஆண்டுகளாக இதை பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமடைந்திருந்தது. ஆனால் அரசு மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் புதிதாக குடிநீருக்கும், கை கழுவுவதற்கும் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பழைய குடிநீர் தொட்டி அகற்றப்படாமல் இருந்துள்ளது. அதுதான் இடிந்து விழுந்துள்ளது. மின் இணைப்பும் சரியாக இல்லாத சூழலும் உள்ளது.” என்றனர். தவளக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments