Monday, April 21, 2025
Homeசெய்திகள்கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழியிலிருந்து 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழியிலிருந்து 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழியிலிருந்து இதுவரையிலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். உள்நாட்டு போரின் போதும், போர் நிறைவடைந்த பின்னரும், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டாலும், இந்த மனிதப் புதைக்குழிகள் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவும் இல்லை. கடந்த ஜூலை மாதம் இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குழி தோண்டியபோது, சில மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து சாலை விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் அகழ்வுப் பணிகள் துவங்கியது. தொல்பொருள் ஆய்வாளர் பேரா.ராஜ் சோமதேவா தலைமையில் மூன்று கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுவரையிலும், 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உடையது, என தெரியவந்துள்ளது.

மேலும், கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என்பதை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் வந்த பின்னர் தான் கூற முடியும், என அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்பு கூடுகள் உள்நாட்டு போரின்போது இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடைய குடும்பங்களாக இருக்கலாம் எனவும், இது குறித்து விரிவாக அகழ்வாய்வு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments