
சிறார்கள் வெற்றி என்ற இலக்குடன், ‘ஆன்லைனில்’ பணம் கட்டி விளையாடவும், மற்ற வயதினர் நள்ளிரவு, 12:00 மணியில் இருந்து அதிகாலை, 5:00 மணி வரை விளையாடவும் தடை விதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நசுமுதீன் தலைமையில், தமிழக இணையவழி விளையாட்டு ஆணையம் செயல்படுகிறது. அதன் உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சாரங்கன் மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக மூவர் உள்ளனர்.
இவர்கள், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், அரசு பல உத்தரவுகளை பிறப்பித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
18 வயதிற்கு உட்பட்ட அனைத்து சிறார்களும், ஆன்லைனில், வெற்றி என்ற இலக்குடன், பணத்தை மையமாக வைத்து பண விளையாட்டில் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது.மற்ற வயதினர், நள்ளிரவு, 12:00 மணியில் இருந்து அதிகாலை, 5:00 மணி வரை விளையாட தடை விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், செயலி மற்றும் பிற சாதனங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட கணக்கு துவங்கும் போது, கே.ஒய்.சி., சரிபார்ப்பில் ஈடுபடுவது கட்டாயமாகும்.
வாடிக்கையாளர்கள் கணக்கு துவங்கும் போது, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள, மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி., எண்களை அனுப்பி சரிபார்க்க வேண்டும். இது, கணக்கு துவங்குவதற்கான சரிபார்ப்புக்கு இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும்.
ஒருவர் ஆன்லைனில் ஒரு மணி நேரமாக விளையாடும் போது, அவருக்கு, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும்.
அனைத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும், தங்களின் வாடிக்கையாளர், தினம், வாரம், மாதம் எவ்வளவு தொகைக்கு விளையாட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும்.
இத்தகைய வரம்பை வகுத்துக் கொள்ளவும், ஒருவர் ஆன்லைன் விளையாட்டில், இதுவரை செலவு செய்த தொகை குறித்து, தடித்த எழுத்தில் எச்சரிக்கை செய்யும் வகையில், ‘பாப் அப்’ என்ற அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டிற்கு செயலி மற்றும் பிற சாதனங்கள் வாயிலாக உள் நுழையும் போது, ‘ஆன்லைன் விளையாட்டு இயற்கையில் அடிமையாக்கும்; இந்த விளையாட்டுகள் போதை பொருளுக்கு நிகரானது’ என்ற எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.