
பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பேரூரில், மேலைச்சிதம்பரம் எனப்படும் பட்டீசுவரர் கோயில் உள்ளது. இங்கு பட்டீசுவரர் மற்றும் பச்சை நாயகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம் பழுது பார்க்கும் புனரமைக்கும் பணி, கோயில் வளாகத்தில் சீரமைப்புப் பணி, வர்ணம் பூசும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி 49 வேதிகை, 60 குண்டங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கடந்த 3-ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 8-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, 9-ம் தேதி நான்காம் மற்றும் 5-ம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று (பிப்.10) கும்பாபிஷேகத்தையொட்டி காலை 5.45 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9.50 மணிக்கு ராஜகோபுரம், அனைத்து விமானங்கள், பரிவார மூர்த்திகள் உள்ளிட்டோருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
தொடர்ந்து காலை 10.05 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன், நடராஜ பெருமான், தண்டபாணி ஆகிய மூல மூர்த்திகளுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (10-ம் தேதி) பேரூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.