
உறவினர் திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்த 23 வயதான இளம்பெண் ஒருவர், மேடையிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப நாட்களாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது நடந்து வருகிறது. விளையாடும் போதும், நடன நிகழ்ச்சிகளின் போதும், மாரடைப்பால் பலர் உயிரிழந்த செய்திகள் வந்துள்ளன.
உ.பி., மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் பரினிதா ஜெயின்(23). எம்.பி.ஏ., பட்டதாரி. இவரது சகோதரர் 12 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் அவரது குடும்பத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், ம.பி., மாநிலம் விதிஷாவில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பரினிதா ஜெயின் பங்கேற்றார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் அவர் மேடையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரினிதா ஜெயினை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மகிழ்ச்சியாக ஆரம்பித்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட இச்சோகம், உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.திருமண விழாவில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.