Saturday, April 19, 2025
Homeசெய்திகள்மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா.

மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் அபாயம் உள்ள நிலையில் பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார்.

பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தில், “இதுவரை மணிப்பூர் மக்களுக்காக சேவை செய்தது மிகப்பெரிய மரியாதை. மணிப்பூரின் ஒவ்வொரு மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், தலையீடுகள், வளர்ச்சிப் பணிகள், பல்வேறு திட்டங்களை செல்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கும் போது, பாஜக எம்எல்ஏகள், தலைவர்கள் உடன் இருந்தனர்.

புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்பு மணிப்பூர் வந்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் பேரவையில் பாஜகவுக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். இத்துடன் நாகா மக்கள் முன்னணியின் ஐந்து எம்எல்ஏக்கள் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஆறு எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது.

இதனால், கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி தனது ஆதரவை திரும்பப் பெற்ற நிலையிலும், பாஜக பெரும்பான்மையுடன் விளங்கியது. என்றாலும் மாநிலத்தில் தலைமையை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் கோரி வருவதால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவினை மீறலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.

மணிப்பூர் பேரவையின் 60 தொகுதிகளில், காங்கிரஸ் வசம் ஐந்து எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு ஏழு எம்எல்ஏக்களும் உள்ளனர். கூடுதலாக மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் குகி சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் கூட்டணியின் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளன.

இதனிடையே 12வது மணிப்பூர் சட்டப்பேரவையின் 7-வது கூட்டத்தொடர் பிப்.10 தேதி திங்கள்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments