
நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் துவக்கி வைக்கிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த தாமிரபரணியை, நம்பியாறு, கருமேனியாற்றை இணைக்கும் வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கு, 2009-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். தாமிரபரணியின் வெள்ள நீரை பயன்படுத்துவதற்காக, 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி நீர் கொண்டு செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.
நான்கு கட்டங்களாக திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், 2 கட்ட பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் வேகம் குறைந்தது. இருப்பினும், 2016ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் திட்டத்திற்கான அனுமதி பெற்ற போதும், கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் திட்ட மதிப்பீடு 950 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், திட்டப் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன.