
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்து 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் நிதானமாக விளையாடி 43 ரன் எடுத்தார். அடுத்து பென் டக்கெட் 32 ரன் சேர்த்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜோஸ் பட்லர்(52) பெத்தேல் (51) அரை சதம் அடித்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்திய தரப்பில் ஹர்சித் ரானா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு 249 ரன் இலக்கு நிர்ணயித்தது.இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் ரன் சேர்க்க திணறினர். ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ரோகித் சர்மா மகமூத் பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஷ்ரேயஸ் சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடி (59) அரைசதம் அடித்தார்.நன்றாக விளையாடிய அக்ஷர் பட்டேல் (52) அரைசதம் அடித்து ரஷித் பந்தில் போல்டானார். நிலைத்து ஆடிய கில் அதிகபட்சமாக 87 ரன் சேர்த்து அவுட் ஆனார். கே.எல்.ராகுல் 2 ரன்னுடன் வெளியேறினார்.
அதன்பிறகு ஹர்திக் பாண்டியா 9 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 38.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.