
இன்று திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 9.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்துள்ளது
அந்த லாரியை தனியார் பேருந்து முந்துவதற்கு முயன்ற போது நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீஸார் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.