Monday, April 7, 2025
Homeசெய்திகள்தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் டன்னை தாண்டியதாக உணவு அமைச்சர் தெரிவிப்பு.

தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் டன்னை தாண்டியதாக உணவு அமைச்சர் தெரிவிப்பு.

தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் டன்னை தாண்டியுள்ளதாக உணவு அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2002-03 கொள்முதல் பருவத்திலிருந்து அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காமலேயே தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்தியதால் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்ற விலையிலும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்ற விலையிலும் கடந்தாண்டு செப்.1-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு செப்.1-ம் தேதி முதல் இந்தாண்டு பிப்.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1 லட்சத்து 44,248 விவசாயிகளிடமிருந்து 10 லட்சத்து 41,583 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2,247.52 கோடி அவர்களின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப். 4-ம் தேதி வரை 7,42,335 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 10 லட்சத்து 41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 லட்சத்து 99,248 மெட்ரிக் டன் அதிகமாகும். நெல் விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments