
சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மீன் பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டயர் வெடித்ததில் விபத்துக்குள்ளானது. சாலையில் கொட்டிக் கிடந்த மீன்களை அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்( 28). வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நடராஜன் விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2 டன் கடல் மீன்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த அகரம் சேரி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென மீன் வேனின் டயர் வெடித்ததில் நடராஜனின் கட்டுப்பாட்டை வேன் இழந்தது. இதையடுத்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த கடன் மீன்கள் சாலை முழுவதும் கொட்டின. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு கிடைத்த பொருள்களில் மீன்களை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் பொதுமக்கள் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சாலை விபத்தால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மீன் பாரம் ஏற்றிச் சென்ற வேனில் இருந்து சாலையில் கொட்டிக் கிடந்த மீன்களை அப்பகுதி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பைகள், பாத்திரங்கள், வாகனங்களில் அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது