
கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று (பிப்.,06) திருநெல்வேலிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சாலையின் இருபுறமும் மக்கள் நின்று முதல்வரை வரவேற்றனர். அப்போது சிலர் முதல்வருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 350 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், ரூ.3,125 கோடி மதிப்பில் விக்ரம் சோலார் நிறுவன ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய ஆலையால், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 80 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மாற்றுதிறனாளிகள் 100 பேருக்கு வேலை கிடைக்கும்.
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர், ‘ இது இந்தியாவிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சோலார் ஆலை, என்றார். முன்னதாக, மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.