
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் காட்சியாக இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டது.
2023-ம் ஆண்டு அஜித்துக்கு ‘துணிவு’ படம் வெளியானது. அதற்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 9 மணிக்கு தான் காட்சி என்றாலும் இரவு முதலே திரையரங்குகளில் ஆடி, பாடி மகிழ்ந்து வருகிறார்கள். அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால், முதல் நாள் வசூல் பெரிதாக இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகியுள்ளது. முதலில் லைகா நிறுவனம் – அஜித் இணையும் படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பின்பு அவர் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி பொறுப்பேற்றார்.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.