
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை எதிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் தடையாக உள்ளதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை எதிர்த்தும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நேற்று முன் தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் – தமிழ்நாடு அரசு மோதல் விவகாரத்தால் மக்களும் மாநில அரசும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி, ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளது. அதில், ஆளுநர் அரசியல் சாசன விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதால் அவருக்கு எதிராக உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.