
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று (பிப்., 05) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மஹா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது. பிப்., 26ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (பிப்., 05) மஹா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு பிரதமர் மோடி வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். முன்னதாக மோட்டார் படகில் கும்பமேளா நடக்கும் இடத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்டார்.தொடர்ந்து அவர் பிரயாக்ராஜில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டார்.