
இந்தியாவின்
இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி. இவர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கி உள்ளார். இந்த மாளிகை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எட்வின் லிடென்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. உலக தலைவர் வசிக்கும் மிகப்பெரிய மாளிகையில் இரண்டாவது இடம் பிடித்துள்ள ஜனாதிபதி மாளிகை 300 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. நான்கு மாடிகள், 340 அறைகள் உள்ளன. இங்கு காந்தாரா மண்டபம், அசோக மண்டபம், அருங்காட்சியகம் உள்ளிட்டவை உள்ளன. 1948ல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜிதான் இங்கு குடியேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதன் பிறகு பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதியாக இந்த மாளிகையில் தங்கி உள்ளனர். உலகின் முக்கிய பிரமுகர்களுக்கு இங்கு வரவேற்பு அளிக்கப்படும். பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டு உள்ளன. ஆனால், தனிநபர் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற்றது கிடையாது.ஜனாதிபதி மாளிகையில் சிஆர்பிஎப் அதிகாரிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இங்கு தனி நபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
ஆனால், இதனை மாற்றும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் சிஆர்பிஎப் அமைப்பின் பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சி இங்கு நடைபெற உள்ளது. பணியில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு, அவரது நேர்மையை பாராட்டி அவரது திருமணத்தை ஜனாதிபதி மாளிகையில் நடத்திக் கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி வழங்கி உள்ளார். இதன் மூலம் இம்மாளிகையில் திருமணம் செய்து கொள்ளப் போகும் முதல் பெண் என்ற பெருமை பூனம் குப்தாவுக்கு கிடைத்து உள்ளது.
ம.பி.,யை சேர்ந்த பூனம் குப்தா, கணித பாடத்தில் இளநிலை பட்டத்தையும், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றார். பிஎட் பட்டமும் பெற்றார். இதன் பிறகு 2018ல் யுபிஎஸ்சியின் சிஏபிஎப் தேர்வில் பங்கேற்று 81வது இடம் பிடித்தார். பிறகு, சிஆர்பிஎப் பிரிவில் துணை கமாண்டன்ட் பதவியில் இருந்தார். பீஹாரில் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் பணியாற்றினார். இவரின் அசாத்திய திறமை பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது.
பூனம் குப்தா திருமணம் செய்து கொள்ளப்போகும், அவினாஸ் குமாரும், சிஆர்பிஎப் அமைப்பில் துணை கமாண்டன்ட் ஆக உள்ளார். தற்போது காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் வரும் 12ம் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் நடைபெற உள்ளது.