
205 சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் இன்று பிற்பகல் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. முன்னதாக, விமானம் இன்று காலையில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விமானத்தில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அமெரிக்க ராணுவ விமானம் C-17, பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 205 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் என்ஆர்ஐ விவகார அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், “அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இவர்கள் பணியாற்றுவதற்காக அமெரிக்கா சென்றனர். பின்னர் அவர்களின் விசா காலம் காலாவதியானது. இதனால் அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக மாறி உள்ளனர். அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்த இவர்களை நாடு கடத்தப்படுவதற்குப் பதிலாக நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அமெரிக்காவில் வசிக்கும் பஞ்சாபியர்களின் நிலை தொடர்பாக விவாதிக்க வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். சட்டவிரோத வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பஞ்சாபியர்களை கேட்டுக்கொள்கிறேன். உலகளவில் வாய்ப்புகளைப் பெற திறன்களையும், கல்வியையும் பெறுவது அவசியம். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் சட்டப்படி செல்வதற்கான வழிகளை அவர்கள் ஆராய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் இன்று பிற்பகல் தரையிறங்க உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, சான்டியாகோ உள்ளிட்ட 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மாகாணங்களில் நாள்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளுக்கு இதுவரை 5,000 பேர் ராணுவ சிறப்பு விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். முதல்கட்டமாக இந்தியாவைச் சேர்ந்த 205 பேரை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளோம். எந்த நாடும் ஏற்காத சட்டவிரோத குடியேறிகளை எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கும் எல் சல்வடார் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.