
காலநிலை கல்வி அறிவை, ஒரு இயக்கமாக முன்னெடுக்க முடிவு செய்துள்ள அரசு, மாநிலத்தின் எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்த உள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் துறை வாயிலாக, ‘தமிழக காலநிலை உச்சி மாநாடு 3.0’ நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:உலக நாடுகளும், மனித சமுதாயமும் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாக காலநிலை மாற்றம் உள்ளது. அதனால்தான் இதை பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.
இதற்காக எனது தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்கு, நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் மாநாடு நடத்தப்பட்டு உள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், நம்மை தகவமைத்துக்கொள்ள விவாதங்களை முன்னெடுப்பதற்கான தளமாக, மாநாடு அமைந்துள்ளது.உலக நாடுகள் இன்றைக்கு பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. துபாய், சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில், கடந்தாண்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ஏற்பட்டது. கேரளாவில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.எல்லா சம்பவங்களுக்கும் காலநிலை மாற்றம் தான் காரணம். இதை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு முதல் தேவை பிரச்னையின் தீவிரத்தை உணர்வது. அனைத்து தரப்பு மக்களுக்கும் காலநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் விளைவுகள் என்ன, அதை எப்படி எதிர்கொள்வது, அதற்கேற்ப எப்படி தகவமைத்துக்கொள்வது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காலநிலை குறித்த கல்வியறிவு பெற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும். எனவே, காலநிலை மாற்றத்தை கல்வித்துறை வாயிலாகவே புகட்ட அரசு திட்டமிட்டு இருக்கிறது.எனவே, காலநிலை கல்வியறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மாநிலத்தின் எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
இதற்காக, காலநிலை கல்வியறிவுக் கொள்கை வகுத்து தமிழக அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது. எல்லாருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும், காலநிலை மாற்றத் தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன்வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிப்படைய கூடிய வேளாண்மை, நீர்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாற வேண்டும். தமிழக அரசு பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாகக் கருதி தொடர்ந்து செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு முன்னெடுப்பும், இதை மனதில் வைத்துதான் செய்யப்படுகிறது.
எதிர்காலத்தில் வரக்கூடிய சூழலியல் பிரச்னைகளை கருத்தில் வைத்து முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.