
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசகரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.